படிக்கட்டில் பொம்மையை எடுக்க சென்ற போது பரிதாபம்: காவிரி ஆற்றில் தவறி விழுந்து 1 வயது குழந்தை சாவு
படிக்கட்டில் விழுந்த பொம்மையை எடுக்க சென்ற போது காவிரி ஆற்றில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 27). இவருடைய மனைவி மதுஸ்ரீ(20). இவர்களுக்கு 1½ வயதில் யாசினி என்ற பெண் குழந்தை இருந்தது.
மதுஸ்ரீயின் தாய் வீடு மேட்டூர் இந்திரா நகரில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மதுஸ்ரீ தனது குழந்தை யாசினியை எடுத்து கொண்டு தாய்வீடான மேட்டூருக்கு வந்தார். மதுஸ்ரீயின் தாய் வீடு காவிரி ஆற்றங்கரையோரம் இருந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு வெளியே குழந்தை யாசினி பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டு இருந்தாள். மதுஸ்ரீ, தனது தாயுடன் வீட்டுக்குள் இருந்து உள்ளார்.
யாசினி விளையாடி கொண்டு இருந்த பொம்மை தவறி அங்குள்ள ஆற்றின் கரையோர படிக்கட்டில் விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த பொம்மையை எடுப்பதற்காக யாசினி ஆற்றின் படித்துறையில் இறங்கி இருக்கிறாள். அப்போது பொம்மையை எடுக்க சென்ற போது குழந்தை தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டாள்.
இதற்கிடையே வீட்டை விட்டு வெளியே வந்த மதுஸ்ரீ விளையாடி கொண்டு இருந்த தனது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மதுஸ்ரீயும், அவரது தாயும் மனம் பதைத்தப்படியே குழந்தையை தேடினார்கள். அந்த பகுதி முழுவதும் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஆற்றின் படித்துறையில் குழந்தை விளையாடிய பொம்மை கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் ஆற்றில் குழந்தை தவறி விழுந்து இருக்குமோ என்ற சந்தேகத்தில் பார்த்து உள்ளனர். படிக்கட்டு அருகே குழந்தை யாசினி ஆற்று நீரில் மிதந்தாள். உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாய் வீட்டுக்கு வந்த இடத்தில் தன்னுடைய குழந்தையை பறிக்கொடுத்து விட்டேனே என மதுஸ்ரீ கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story