காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
மாவட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார இயக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட கன்வீனர் சின்னத்துரை பேசியதாவது:– காரைக்குடி நகர் முழுவதும் குறிப்பாக வைரவபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தீவிரமாக சிகிச்சை முகாமை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்றார். மேலும் கடந்த 2 மாதமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கால் மூட்டு வலியும், முகம் கருத்து போயும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். வீடுவீடாக வரும் சுகாதாரதுறையினர் வீட்டுக்குள் இருக்கும் குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்குகிறதா என்று சோதனை செய்கின்றனர். ஆனால் சாலைகள், ரோடுகளில் தேங்கியிருக்கிற சாக்கடையை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.
சுகாதாரத்துறை காய்ச்சல் குறித்து எதுவும் சொல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால், அரசு உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் குறித்த விவரங்களை சொல்ல மறுக்கின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒரு மாதத்திற்கும் மேலாக எவ்வித வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ செலவிற்கும், அவர்களின் அன்றாட குடும்ப செலவிற்கும் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், தொடர்ந்து காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.