பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் புழுதி மண்டலமாக மாறிய ஈரோடு மாநகரம்


பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் புழுதி மண்டலமாக மாறிய ஈரோடு மாநகரம்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் புழுதி மண்டலமாக ஈரோடு மாநகரம் மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் குழாய் பதிக்கும் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குறிப்பாக ஈரோடு நாச்சியப்பா வீதி, ஈ.வி.என்.ரோடு, பெரியவலசு உள்ளிட்ட இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. மேலும், குழாய் பதிக்கப்பட்டு மூடிய இடங்களில் உடனடியாக தார் சாலை அமைக்கப்படுவதில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வரும்போது புழுதி பறக்கிறது.

இதில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஸ்டோனி பாலம் வரையுள்ள ஈ.வி.என்.ரோட்டில் பாதாள சாக்கடை அமைத்தல், மின்கேபிள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களும், கார்களும் வழக்கம்போல் சென்று வருகின்றன. அப்போது புகையை போல புழுதி உயரே பறப்பதால் புழுதி மண்டலமாகவே மாறியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். மேலும், சாலையோரமாக உள்ள கடைகள், வீடுகளில் தூசி படிவதால் பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

ஈரோடு நாச்சியப்பா வீதியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டி குழாய்கள் பதித்து மூடப்பட்டன. இதில் பஸ்கள் வெளிவரும் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பின்னர் மீண்டும் குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாயின் உடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால் சரியாக சீரமைக்கப்படாததால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் குடிநீர் குழாய் சரிசெய்யப்படாததால் அங்கு குழிகள் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும்போது சிரமம் ஏற்படுகிறது. எனவே குடிநீர் குழாயை சரியாக பொருத்திவிட்டு விரைவில் குழியை மூட வேண்டும். மேலும், பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதியில் உடனுக்குடன் தற்காலிகமாக தார் சாலை அமைத்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story