வாக்காளர் பட்டியலை முழுமையாக வெளியிட அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் மாவட்ட பார்வையாளர் அதுல் ஆனந்த் வேண்டுகோள்


வாக்காளர் பட்டியலை முழுமையாக வெளியிட அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் மாவட்ட பார்வையாளர் அதுல் ஆனந்த் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதுல் ஆனந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிட அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதுல் ஆனந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2019 தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், புள்ளியியல் துறை ஆணையருமான அதுல்ஆனந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் பேசியதாவது:-

சிறப்பு முகாம்கள்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி மாதம் 1-ந் தேதி தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தன.

இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 31.10.2018 வரை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். மேலும், இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும்.

அதிகாரிகள் ஒருங்கிணைந்து...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி மாதம் 4-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனடியாக களஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் செம்மையான முழு வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

31-ந் தேதி வரை...

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் பெயர் சேர்க்க 19 ஆயிரத்து 385 பேரும், பெயர் நீக்கம் செய்ய 1926 பேரும், முகவரி மாற்றம் செய்ய 3 ஆயிரத்து 768 பேரும், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 1,681 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

மொத்தம் 26 ஆயிரத்து 760 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அனைத்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 31-ந் தேதி வரை மக்கள் மனுக்களை அந்தந்த வாக்குச்சாவடிகளில் கொடுக்கலாம். இந்த பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான்வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்கள் பிரசாந்த், சிம்ரான்ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர்கள் கோவிந்தராஜூ(திருச்செந்தூர்), விஜயா(கோவில்பட்டி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், தேர்தல் பிரிவு தாசில்தார் நாகராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க. மேற்கு பகுதி செயலாளர் முருகன், சந்தணம், பா.ஜனதா மாவட்ட செயலாளர் சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர் மற்றும் தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பார்வையாளர் ஆய்வு

தொடர்ந்து தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமை மாவட்ட பார்வையாளர் ஆய்வு செய்தார்.

Next Story