10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 7:47 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் அருகே நேற்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் பட்டினி போராட்டம் என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு மண்டல தலைவர் சார்லஸ் செல்வராஜ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் கந்தசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். கிளைக்கழக பொறுப்பாளர்கள் நாகேஸ்வரன், ராமன், பாவேந்தர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற கல்லூரிகளின் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவேண்டும். தர ஊதியம் பெறுவதற்கான அரசாணை 102-ல் திருத்தம் செய்யவேண்டும். எம்.பில், பி.எச்டி முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் நெறிமுறைகள் படி ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும். கல்லூரிகளில் பேராசிரியர் பணி மேம்பாடு காலமுறைப்படி வழங்கப்படவேண்டும். 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு தகுதி சான்று, பணிவரன்முறை ஆணை மற்றும் தகுதி காண் பருவம் முடித்தமைக்கான ஆணை வழங்க வேண்டும். உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும், அரசு கல்லூரிகளின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முடித்து வைத்தார். முடிவில் மண்டல பொருளாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

Next Story