ராஜபாளையம் முன்மாதிரி தொகுதியாக மாறும் – தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.


ராஜபாளையம் முன்மாதிரி தொகுதியாக மாறும் – தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் முன்மாதிரி தொகுதியாக மாறும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

ராஜபாளையம்,

 தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு முன்மாதிரி எம்.எல்.ஏ.வாக திகழ்ந்து வருபவர் தங்கப்பாண்டியன். ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க. சார்பில் நின்று வெற்றி பெற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தனது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒவ்வொரு மாத சம்பளத்தையும் பல்வேறு மக்கள் நலனுக்காக வழங்கி வருகிறார். ராஜபாளையத்தில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது–

ராஜபாளையத்தில் 2010–ம் ஆண்டு புறவழிச்சாலை அமைக்க மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து ராஜபாளையத்திற்கு புறவழிச்சாலை மட்டும் போதாது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்தால் வசதியாக இருக்கும் என கருதி சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைதுறை அலுவலத்தில் முதன்மை பொது மோலாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன். அதன் பலனாக மேற்கண்ட திட்டத்திற்கு 76 கி.மீட்டருக்கு கடந்த 2016–ம் ஆண்டு நான்கு வழிச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசால் விரிவான அறிக்கை திட்டம் தயாரிக்க டெண்டர் வைக்கப்பட்டதில் இந்த டெண்டரை நாக்பூரை சேர்ந்த நிறுவனம் எடுத்துள்ளது. மேற்கண்ட ஆய்வுக்காக மத்திய அரசால் ரூ.3 கோடியே 45 லட்சம் ஒதுக்கப்பட்டு டெண்டர் எடுக்கப்பட்ட நிறுவனத்தால் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு மூன்று வழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு அதில் எது மக்களுக்கும், அரசுக்கும் வசதியாக இருக்கும் என்பதை பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும் என நெடுஞ்சாலை துறையின் பொது மேலாளர் தெரிவித்தார். மேலும் திருமங்கலத்தில் இருந்து சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கும், கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் ராஜபாளையம் மார்க்கமாக செல்லவேண்டியது உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் விதமாக திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட எல்லை முடிவான சொக்கநாதன்புத்தூர் விலக்கு வரையான நான்கு வழிச்சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு விரையில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

இதுபோல், தென்னக ரெயில்வே மேலாளரை நேரில் சந்தித்து சிலம்பு எக்ஸ்பிரசை அனைத்து நாட்களுக்கும் நீட்டிக்க வலியுறுத்தினேன். மேலும் செங்கோட்டை முதல் ராஜபாளையம் வழியாக கோவைக்கும், செங்கோட்டை முதல் ராஜபாளையம் வழியாக ராமேசுவரத்திற்கும், செங்கோட்டை முதல் ராஜபாளையம் வழியாக நாகூருக்கும், செங்கோட்டை முதல் ராஜபாளையம் வழியாக பெங்களுரூக்கும் ரெயில்கள் இயக்கினால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என வலியுறுத்தினேன். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே மேலாளர் தெரிவித்தார்.

இதேபோல, ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவர முனைப்பு காட்டினேன். ராஜபாளையம் வட்டம் சேத்தூர் பேரூராட்சி பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முத்துசாமியாபுரத்தில் உள்ள கண்மாயில் மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் புதிய குடிநீர் கிணறு மற்றும் மேல்நிலைதொட்டி அமைக்க ரூ.50 லட்சம் தொகுதி நிதியில் இருந்து அளிப்பதாக சென்னையில் உள்ள பேரூராட்சி இயக்குனரிடம் மனு அளித்தேன். இதுதவிர பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் ராஜபாளையம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து வகையிலும் ராஜபாளையம் தொகுதி முன்மாதிரியா விரைவில் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story