பண்ருட்டி அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பண்ருட்டி அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 14 Oct 2018 9:30 PM GMT (Updated: 14 Oct 2018 8:00 PM GMT)

பண்ருட்டி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டி, 

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா மற்றும் போலீசார் கடந்த மாதம் 17-ந்தேதி மேல்குமாரமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காடாம்புலியூர் தாழம்பட்டை சேர்ந்த வீரமுத்து மகன் பிரகாஷ்(வயது24) என்பவர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தபோது, அவர் போலீசாரை ஆபாசமாக திட்டி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தார். மேலும் டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகாஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே இவர் மீது காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒரு மணல் கடத்தல் வழக்கும், 2 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால், அவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பிரகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதற்கான நகல் கடலூர் மத்திய சிறைத்துறை அதிகாரிகள் மூலம் அவரிடம் வழங்கப்பட்டது.


Next Story