திருப்பூர் பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்; கலெக்டர் ஆய்வு


திருப்பூர் பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர்,

1–1–2019–ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்–2019 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி 1–9–2018 அன்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு உள்பட 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,028 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய விரும்புவோர் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலை, மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கல்லூரி சாலையில் உள்ள சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கள விசாரணை மேற்கொண்டு உரிய காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story