தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நாராயணசாமி வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு


தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நாராயணசாமி வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2018 11:30 PM GMT (Updated: 14 Oct 2018 8:25 PM GMT)

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் முன்பு நேற்றிரவு தனியார் மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிகுளத்தில் உள்ள ‘பிம்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை 100–ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்ததையடுத்து கூடுதலாக அனுமதி வழங்கப்பட்ட 50 மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து மீண்டும் ‘சென்டாக்’ கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை நாளை (செவ்வாய்க்கிழமை)க்குள் நிரப்ப வேண்டும் எனவும் காலக்கெடு விதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) புதுவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ‘சென்டாக்’ அலுவலகத்தில் நடக்கிறது.

இதனால் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகள் 50 பேர் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவர்கள் நேற்று முன்தினம் புதுவை கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி கவர்னர் கிரண்பெடி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 50 பேரும் நேற்று இரவு தங்களின் பெற்றோருடன் புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் முறையிடுவதற்காக அவரது வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை பார்க்க வேண்டும் என அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மருத்துவ மாணவ–மாணவிகள் முற்றுகை குறித்த தகவல் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு சில மாணவ–மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் வீட்டிற்குள் செல்ல அனுமதி வழங்கினார்கள். அப்போது மாணவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், மருத்துவக் கல்லூரியில் நாளை (இன்று) கலந்தாய்வு நடக்கிறது. இதனால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே தங்களுக்கு உதவும்படி கோரிக்கைவிடுத்தனர்.

அதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி பதிலளிக்கையில், ‘மருத்துவக் கல்லூரியில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதாக கூறி, மீண்டும் கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவினை மீற முடியாது’ என்றார்.

– – –


Next Story