கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 8:34 PM GMT)

தக்கலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது குறித்து கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுதா (37). ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர், அதன் பின்பு திடீரென மாயமானார்.

இதுகுறித்து சுதாவின் அண்ணன் ரவி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். விசாரணையில் சுதாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து, பிணத்தை வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறை தொட்டியில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் போலீசார், கழிவறை தொட்டியை திறந்து ராஜசேகரின் உடலின் பாகங்களையும், எலும்புகளையும் சேகரித்து எடுத்தனர். தொடர்ந்து, எலும்புகூட்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் சோதனை முடிவில் இறந்தவர் தொழிலாளி ராஜசேகர் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. இதையடுத்து சுதாவை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம், சுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் ராஜசேகரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பின்பு ராஜசேகர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அப்போது, எனக்கும் ஆல்பின் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலுக்கு ஆல்பினின் நண்பர் ஆன்டனி ஷிபு உதவியாக இருந்தார். இதற்கிடையே ஆல்பின் வெளிநாட்டுக்கு சென்றார். அதன் பின்பு எனக்கும் ஆன்டனி ஷிபுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் ராஜசேகருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து வெளிநாட்டில் உள்ள ஆல்பினுடன் ஆலோசனை கேட்டேன். அப்போது, அவர் ராஜசேகரை கொலை செய்து விட்டால், நாம் சந்தோஷமாக இருக்கலாம் என கூறினார். இதையடுத்து கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்காக சம்பவத்தன்று உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தேன். அவர் அயர்ந்து தூங்கியதும் வெளிநாட்டில் இருந்த ஆல்பினுக்கு தகவல் கொடுத்தேன். அவர் தனது நண்பர் ஆன்டனி ஷிபுவை அனுப்பி வைத்தார். அவர் வீட்டுக்கு வந்ததும் ராஜசேகர் மீது மின்சாரம் செலுத்தி கொல்ல முயன்றோம். இதில் அவர் சாகவில்லை. இதையடுத்து அரிவாளால் வெட்டியும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்தோம். பின்பு, உடலை ஒரு கோணி பையில் அடைத்து, வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டோம்.

அதன்பின்பு, எதுவும் தெரியாதது போல், நாடகமாடினேன். இதற்கிடையே போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த கொலையில் தொடர்பு உடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story