இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ், தி.மு.க. தான் குற்றவாளி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ், தி.மு.க. தான் குற்றவாளி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2018 4:45 AM IST (Updated: 15 Oct 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரசும், தி.மு.க.வும் தான் குற்றவாளி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

பத்மநாபபுரம்,

தக்கலை கல்குளம் தாலுகா அருகே மத்திய அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் உண்ணிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது;-

குமரியில் துறைமுகம் என்பது தற்போது மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தேர்தல் வாக்குறுதியைத் தான் நான் நிறைவேற்றினேன். ஏனென்றால், 70 ஆண்டுகால கனவு திட்டம். ஆனால், தற்போது அவர்களே அந்த திட்டத்தை நெல்லை மாவட்டத்திற்கு மாற்ற கூறி வருகின்றார்கள். மேலும், எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். பொய்யான தகவலை அளித்து மீனவ சமூகத்தினர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

அதே போன்று விமான நிலைய திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால், 600 ஏக்கர் நிலப்பரப்பில் குமரி-நெல்லை என இரண்டு மாவட்டத்துக்கு இடையே விமான நிலையம் அமைகிறது. கன்னியாகுமரி-சென்னைக்கு கடல் வழியாக போக்குவரத்து நடைபெறுவதற்காக மத்திய சுற்றுலாத்துறை மந்திரியை சந்தித்து பேசியுள்ளேன். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமையும். உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை கவனித்து வருகிறது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும், கேரள மாநில ஆட்சியாளர்களின் நடைமுறையையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சே ஒரு கருவி தான். அந்த போரில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும் தான் குற்றவாளி. எனவே இனி வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்கு அளித்தால் இலங்கை தமிழர்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது நாஞ்சில் சம்பத்தின் தம்பி நாஞ்சில் கருணாநிதி பா.ஜன தாவில் இணைந் தார்.

மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், கீதா மணி, மாநில செயற்குழு உறுப்பினர் ஷிபா பிரசாத், கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பத்மநாபபுரம் நகர தலைவர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.

Next Story