கர்நாடகத்தில் 456 பேருக்கு பாதிப்பு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனே ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் பரமேஸ்வர் வேண்டுகோள்
கர்நாடகத்தில் 456 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், எனவே பன்றி காய்ச்சல் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று பொதுமக்களுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வேண்டுகோள் விடுத்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 456 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், எனவே பன்றி காய்ச்சல் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று பொதுமக்களுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வேண்டுகோள் விடுத்தார்.
456 பேருக்கு பன்றி காய்ச்சல்
பெங்களூருவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் பன்றி காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இதுவரை மொத்ததம் 4,902 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 456 பேருக்கு பன்றி காய்ச்சல் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
6 பேர் மரணம்
இந்த பன்றி காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் வந்தால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று, உரிய சிகிச்சை பெற வேண்டும்.
கர்நாடகத்தில் 2015-ம் ஆண்டு பன்றி காய்ச்சலால் 95 பேரும், 2017-ம் ஆண்டு 15 பேரும் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு இதுவரை 6 பேர் மரணம் அடைந்து உள்ளனர். வடகர்நாடகத்தில் பன்றி காய்ச்சலை கண்டுபிடிக்கும் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் இல்லை. அதனால் வடகர்நாடகத்தில் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். பெங்களூருவில் மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் மரணம் அடைந்தனர்.
மக்களிடையே விழிப்புணர்வு
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த பன்றி காய்ச்சல் தொற்று, காற்று மூலம் பரவுகிறது. அதனால் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து சற்று தொலைவில் இருப்பது நல்லது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
காங்கிரஸ் போட்டியிடுகிறது
இதைதொடர்ந்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். ஜமகண்டி, பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. சிவமொக்காவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு சமமான பலம் உள்ளது. அந்த தொகுதியை தங்களுக்கு விட்டுக்கொடுக்குமாறு ஜனதா தளம்(எஸ்) கேட்கிறது. இதுபற்றி ஆலோசனை நடந்து வருகிறது“ என்றார்.
Related Tags :
Next Story