காரிமங்கலம் ஒன்றியத்தில் மாம்பழம் பதனிடும் தொழிற்சாலை ரஜினி மக்கள் மன்ற கூட்டத்தில் தீர்மானம்


காரிமங்கலம் ஒன்றியத்தில் மாம்பழம் பதனிடும் தொழிற்சாலை ரஜினி மக்கள் மன்ற கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் ஒன்றியத்தில் அரசு சார்பில் மாம்பழம் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய, நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் ராமாயி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ஞானப்பழம், சாய் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் பெப்சி வெங்கடேஷ், ராஜசேகரன், ஜெயா, ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மோகன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். எண்ணேகொள் புதூரில் இருந்து தென்பெண்ணையாற்று தண்ணீரை தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வரும் திட்டத்தினை உடனே நிறைவேற்ற வேண்டும். காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். காரிமங்கலம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்.

காரிமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான புறநகர் பஸ்கள் வருவதில்லை. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே காரிமங்கலம் பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். காரிமங்கலம் ஒன்றியத்தில் அரசு சார்பில் மாம்பழம் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் கோபி, சுரேஷ், டாக்டர் மோகனசெந்தில், ஜெயகவுசல்யா, ஓம்பிரகாஷ், அருண் சக்கரவர்த்தி, வெங்கடசாமி, இலியாஸ், செபாஸ்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேகர், பாரதி, பெருமாள் மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாதையன் நன்றி கூறினார். முன்னதாக காரிமங்கலம் பஸ் நிலையம் அருகில் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர்.

Next Story