மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்


மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் நேற்று ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.

மைசூரு, 

மைசூருவில் நேற்று ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.

சரஸ்வதி பூஜை

மைசூரு தசரா விழாவையொட்டி நேற்று உலகப்புகழ்பெற்ற மைசூரு அரண்மனையில் மன்னர்களின் சம்பிரதாயப்படி, இளவரசர் யதுவீர் தலைமையில் சரஸ்வதி பூஜை நடந்தது. நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து அரண்மனையில் தினமும் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி 5-வது நாளான நேற்று அரண்மனையின் அம்பா விலாச அறையில் ராஜகுருக்களின் சன்னதியில் வைத்து இளவரசர் யதுவீர் கலச பூஜை, கணபதி பூஜை, சாமுண்டீஸ்வரி பூஜை ஆகியவற்றை நடத்தினார்.

பின்னர் அரண்மனையில் இருக்கும் ஓலைச்சுவடிகள், நாவல்கள், மன்னர்கள் காலத்தின் பழைய புத்தகங்கள், பழங்கால வீணைகள் ஆகியவற்றுக்கு பூஜை செய்தார். அதையடுத்து அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று அரண்மனையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை

இதற்கிடையே தினமும் காலையிலும், மாலையிலும் தசரா யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசுமாடுகள் ஆகியவை அரண்மனை வளாகத்தில் இருக்கும் திரிணேஸ்வரர் கோவிலுக்கும், பின்னர் பன்னி மரத்திற்கும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். அதேபோல் நேற்றும் யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் பசுமாடுகளின் ஊர்வலம் நடந்தது. அவற்றுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நடந்தது. அரண்மனை வளாகத்தில் இருந்து ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கியது. அரண்மனை வளாகத்தில் உள்ள நந்தி தூணுக்கு பூஜைகள் செய்து, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் இந்த கலாசார ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் நடைபெறுவதையொட்டி தங்க அம்பாரியை சுமக்க உள்ள அர்ஜூனா யானை உள்பட 10 யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

750 கிலோ எடை கொண்ட...

ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகையும் அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் தீப்பந்துவிளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. தங்க முலாம் பூசப்பட்ட 750 கிலோ எடை கொண்ட இரும்பினால் ஆன அம்பாரியை 9 யானைகள் புடை சூழ அர்ஜூனா யானை சுமந்து சென்றது. அதில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையும் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த ஊர்வலத்தில் வழக்கம்போல் மேளதாளங்களுடன் கலைக்குழுவினர் கலந்து கொண்டு ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு, பல்வேறு குழுவினரின் சாகசங்கள் ஆகியவையும் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சியை மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

Next Story