பெங்களூருவில் நிலப்பிரச்சினையில் தனியார் பள்ளியின் தலைவர் குத்திக் கொலை தப்பி ஓடியவர்களில் ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்
பெங்களூருவில் நிலப்பிரச்சினை தொடர்பாக தனியார் பள்ளிக்குள் புகுந்து, பள்ளியின் தலைவரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் நிலப்பிரச்சினை தொடர்பாக தனியார் பள்ளிக்குள் புகுந்து, பள்ளியின் தலைவரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் கொலை செய்தனர். அதில் தப்பி ஓடியவர்களில் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளியின் தலைவர் கொலை
பெங்களூரு அக்ரஹாரா தாசரஹள்ளி அருகே பாப்பையா கார்டனில் காவனூர் பப்ளிக் எனும் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளி ரங்கநாத் நாயக் என்ற ரங்கநாத் (வயது 63) என்பவருக்கு சொந்தமானதாகும். அவரே பள்ளியின் தலைவராகவும் இருந்தார். பசவேசுவராநகரில் தனது மனைவி, பிள்ளைகளுடன் ரங்கநாத் நாயக் வசித்து வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளிலும், பள்ளியில் சில பணிகளை செய்வதற்காக ரங்கநாத் நாயக் பள்ளிக்கு வந்திருந்தார். மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். காலை 10 மணியளவில் பள்ளியில் உள்ள தனது அறையில் அமர்ந்து ரங்கநாத் நாயக் வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் மர்மநபர்கள் சிலர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் ரங்கநாத் நாயக் அமர்ந்திருந்த அறைக்குள் புகுந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்கள். இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் அந்த இடத்திலேயே துடிதுடித்து ரங்கநாத் நாயக் உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையில், ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது ரங்கநாத் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக மாகடி ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து ரங்கநாத் நாயக்கின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நிலப்பிரச்சினையால் ரங்கநாத் நாயக் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு ரங்கநாத் நாயக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக ரங்கநாத் நாயக்கின் உடலை பார்த்து அவரது மனைவி, குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இந்த கொலை குறித்து துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது;-
நிலப்பிரச்சினையில்...
பெங்களூரு பாப்பையா கார்டனில் உள்ள காவனூர் பப்ளிக் பள்ளியின் தலைவராக ரங்கநாத் நாயக் இருந்து வந்தார். அவருக்கும், பள்ளியையொட்டி வசிக்கும் கங்கம்மாவுக்கும் நிலப்பிரச்சினை இருந்துள்ளது. அந்த நிலப் பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் நடந்த வழக்கில் ரங்கநாத் நாயக்கிற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனாலும் கங்கம்மாவின் மகன்களான பிரசாத்தும், மகேசும், ரங்கநாத் நாயக்குடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதுதொடர்பாக பேசுவதற்காகவும், பள்ளியில் சில பணிகளை செய்யவும் நேற்று காலையில் பள்ளிக்கு ரங்கநாத் நாயக் வந்துள்ளார். அப்போது பிரசாத்தும், மகேசும் பள்ளிக்கு சென்றுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தகராறில் பிரசாத், மகேஷ், முனிராஜ் என்ற பப்ளி, சீனிவாஸ் உள்ளிட்ட மேலும் சிலர் சேர்ந்து ரங்கநாத் நாயக்கை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு மாகடி ரோடு போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
இந்த நிலையில், ரங்கநாத் நாயக் கொலையில் தேடப்பட்ட முனிராஜ் என்ற பப்ளி மகாலட்சுமி லே-அவுட் அருகே பதுங்கி இருப்பதாக மாகடி ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் மகாலட்சுமி லே-அவுட் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பதுங்கி இருந்த முனிராஜை போலீசார் சுற்றி வளைத்தார்கள். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து முனிராஜ் தப்பி ஓட முயன்றார். மேலும் போலீஸ்காரர்கள் சீனிவாஸ் மற்றும் நவீனை, முனிராஜ் ஆயுதங்களால் தாக்கினார். இதில், 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் முனிராஜை நோக்கி 3 ரவுண்டு இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் சுட்டார். இதில், முனிராஜின் காலை ஒரு குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் முனிராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
முனிராஜ் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் சீனிவாசும், நவீனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக மாகடி ரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சகோதரர்களான பிரசாத், மகேஷ் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
அதுபோல, முனிராஜ் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டது குறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூருவில் தனியார் பள்ளி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும், கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story