ஹில்குரோவ் - ரன்னிமேடு இடையே ஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு


ஹில்குரோவ் - ரன்னிமேடு இடையே ஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு
x
தினத்தந்தி 15 Oct 2018 5:00 AM IST (Updated: 15 Oct 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்- ரன்னிமேடு ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.

குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்- ரன்னிமேடு ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதை அறியாமல் நேற்று காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வழக்கம்போல் மலைரெயில் இயக்கப்பட்டது. ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே சென்றபோது, மண் சரிவு ஏற்பட்ட இடத்துக்கு முன்பாக மலைரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

உடனே ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றினர். இதையடுத்து மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. மண் சரிவு காரணமாக வழக்கம்போல் குன்னூருக்கு காலை 10.30 மணிக்கு வந்து சேரும் மலைரெயில், அரை மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து காலை 11.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.இதனிடையே பலத்த மழை காரணமாக குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் தீயணைப்பு படையினர் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.



Next Story