பா.ஜனதா, சிவசேனா தலா 2½ ஆண்டுகள் வீதம் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்துகொள்ள வேண்டும் ராம்தாஸ் அத்வாலே யோசனை


பா.ஜனதா, சிவசேனா தலா 2½ ஆண்டுகள் வீதம் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்துகொள்ள வேண்டும் ராம்தாஸ் அத்வாலே யோசனை
x
தினத்தந்தி 15 Oct 2018 5:00 AM IST (Updated: 15 Oct 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தலா 2½ ஆண்டுகள் வீதம் முதல்-மந்திரி பதவியை சமமாக பகிர்ந்துகொள்ள யோசனை தெரிவிக்க உள்ளதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

புனே, 

பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தலா 2½ ஆண்டுகள் வீதம் முதல்-மந்திரி பதவியை சமமாக பகிர்ந்துகொள்ள யோசனை தெரிவிக்க உள்ளதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

கூட்டணி கேள்விக்குறி

மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடையே தற்போது நல்ல உறவு இல்லை. இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகள் போல செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதனால் வரும் தேர்தல்களில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஏற்படுவது கேள்விக்குறியாகியது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று கூறியதாவது:-

புதிய முறைக்கு வலியுறுத்தல்

எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிக்குதான் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்ற முறையே தற்போது உள்ளது. ஆனால் கூட்டணியை சுமுகமாக்குவதற்காக முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளின் தலைவர்களும் சமமாக( தலா 2½ ஆண்டுகள்) பிரித்து பகிர்ந்துகொள்ளும் முறையை பின்பற்றுமாறு பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியின் தலைவர்களை சந்தித்து யோசனை தெரிவிக்க உள்ளேன்.

மும்பை தென்மத்திய நாடாளுமன்ற தொகுதி தற்போது சிவசேனா வசம் உள்ளது.

கூட்டணி அமையும் பட்சத்தில் அந்த தொகுதியை எனக்கு விட்டுக்கொடுக்குமாறு சிவசேனாவிடம் கோரிக்கை வைப்பேன். அதற்கு பிரதிபலனாக பா.ஜனதாவிடம் பேசி பால்கர் தொகுதியை சிவசேனாவுக்கு ஒதுக்குமாறு கூறுவேன்.

பிரகாஷ் அம்பேத்கரின் பரிபா பகுஜன் மகாசங், எம்.ஐ.எம்.ஐ.எம். கட்சி கூட்டணியில், பகுஜன் விகாஸ் அகாடியும் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளும் கட்சிக்கு பலன் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story