நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் இந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் சபதம்


நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் இந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் சபதம்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:45 AM IST (Updated: 15 Oct 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று இந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் சபதம் எடுத்து உள்ளனர்.

மும்பை, 

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று இந்தி திரையுலக பெண் இயக்குனர்கள் சபதம் எடுத்து உள்ளனர்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை ‘மீ டூ’(நானும்தான்) என்னும் இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆலிவுட் படவுலகில் பிரபலம் அடைந்த ‘மீ டூ’ இயக்கம் தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தி திரையுலகின் முக்கிய பிரமுகர்களான நானா படேகர், ரஜத் கபூர், சுபா‌ஷ் கய், அலோக் நாத் உள்ளிட்ட பலர் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண் டைரக்டர்கள் சபதம்

இந்த நிலையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தார் ஆகியோர் நேற்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், ‘‘மீ டூ இந்தியா இயக்கத்துக்கு எங்களது ஒருங்கிணைந்த ஆதரவை அளிக்கிறோம். பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் துணிச்சலாக அதை வெளியே கூறத் தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்க புரட்சியாகும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சம அந்தஸ்து அளிக்கப்படும் சூழலை உருவாக்க நாங்கள் கூட்டாக பிரசாரம் செய்வோம். மேலும், பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நடிகர்கள் யாருடனும் நாங்கள் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

தண்டனை வேண்டும்

‘மீ டூ’ இந்தியா இயக்கத்துக்கு பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘25 ஆண்டுகளுக்கு முன்பு நானும் சினிமாவில் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறேன். ஆனால் பாலியல் ரீதியாக அல்ல. அந்த கோபம் இன்றும் என்னிடம் உள்ளது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இது பழைய சம்பவம் என்று விட்டு விடக் கூடாது. தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கவேண்டும். அதுதான் சரியானது’’ என்று குறிப்பிட்டார்.

Next Story