வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் மந்திராலயா முன்பு 27-ந் தேதி போராட்டம் மராத்தா சமூகத்தினர் அறிவிப்பு


வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் மந்திராலயா முன்பு 27-ந் தேதி போராட்டம் மராத்தா சமூகத்தினர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2018 4:50 AM IST (Updated: 15 Oct 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் வரும் 27-ந் தேதி மந்திராலயா முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்து உள்ளனர்.

மும்பை, 

வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் வரும் 27-ந் தேதி மந்திராலயா முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்து உள்ளனர்.

வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்

மராத்தா சமூகத்தினர் கடந்த பல ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் 16 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு அமைதியான முறையில் போராடி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் இடஒதுக்கீடு கேட்டு நடந்த மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மும்பை, புனே உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என முதல்-மந்திரிக்கு மராத்தா சமூகத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

மந்திராலயா முன் போராட்டம்

இந்தநிலையில் மாநில அரசு மராத்தா சமூகத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் மந்திராலயா முன் போராட்டம் நடத்துவோம் என அந்த சமூகத்தினர் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மராத்தா சமூக மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குஷ் கதம் கூறுகையில் ‘‘போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் எங்கள் சமூக வாலிபர்களை துன்புறுத்தி வருகின்றனர். எந்தவித விசாரணையும் இன்றி 1,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வழக்குகளை வாபஸ் வாங்குவதாக முதல்-மந்திரி உறுதி அளித்து இருந்தார். 26-ந் தேதிக்குள் வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் 27-ந் தேதி நாங்கள் மந்திராலயா முன் வாகனப்பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

Next Story