திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது முதல் 65 வயதுவரை உள்ள ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள நபர்கள் இந்த திட்டங்களுக்காக விண்ணப்பிக்கலாம். இதன்படி நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின்இணைப்பு திட்டம் ஆகியவற்றிற்காகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமையம், மருந்தியல், கண் கண்ணாடி நிலையம், முட நீக்கியல் மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன்உதவி மானியம் திட்ட தொகையில் 50 சதவீத பெறுதல், மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதியை பெறவும் விண்ணப்பிக்கலாம்.
இதுபோல இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டபட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத்தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டய கணக்கர் மற்றும் செலவுக்கணக்கர் மற்றும் நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி, தொழில் தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவிகளை பெறவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தங்கள் புகைப்படம், இருப்பிட சான்றிதழ் எண், சாதி சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண்(வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம்–நேர்காணல் நடத்தப்படும் தேதிக்கு 1½ ஆண்டுகள் முன்பு வரை வருமான சான்று பெற்றிருக்கலாம். அதாவது வருமான சான்றின் வயது 1½ ஆண்டு வரை இருக்கலாம்). பட்ட, சிட்டா(நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு திட்டம்), குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி எண், விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். தொலை பேசி, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்ப தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.
மேலும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளியிடம் இருந்து ரூ.60 வசூல் செய்யப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன் ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள பல்லடம் ரோட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மேலாளரை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.