கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டம் மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமிஷனர் உத்தரவு
20 நிமிடத்துக்குள் விமானநிலையம் சென்றடையும் வகையில், கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை,
கோவை அவினாசி ரோட்டில் நாளுக்குநாள்போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அவினாசி ரோடு மேம்பாலம் முதல் விமானநிலைய சிக்னல்வரை மொத்தம் 13 சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு சிக்னல்களிலும் நின்று வாகனங்கள் செல்லும்போது, விமானநிலைய சிக்னலை அடைய 35 நிமிடங்கள் ஆகிறது.
எனவே ஒரு சிக்னல் முடிந்து அடுத்த சிக்னலை வாகனங்கள் அடையும்போது அந்த சிக்னலிலும் பச்சை விளக்கு எரிந்து வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல கிரீன் காரிடர்(தடையில்லா போக்குவரத்து) கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1–ந்தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு சிக்னலும் எலெக்ட்ரானிக் சிக்னலாக மாற்றப்பட்டு தானியங்கி முறை செயல்படுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் காத்திருக்காமல் விரைந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் சிக்னல் பராமரிப்பில் குறைபாடு ஏற்பட்டு, பல சிக்னல்களில் தானியங்கி எலெக்டிரானிக் சிக்னல் செயல் இழந்ததால், போக்குவரத்து போலீஸ்காரர்களே சிக்னல்களில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முறை மீண்டும் ஏற்பட்டது. இதனால் தடையில்லா போக்குவரத்து திட்டம் தோல்வியில் முடிந்தது.
கோவை நகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்றுள்ள சுமித் சரண், தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சுஜித்குமார் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதுடன், திருச்சி ரோட்டில் அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறியதாவது:–
தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம், கோவை அவினாசிரோடு மேம்பாலம் பகுதியில் இருந்து அவினாசி ரோடு சித்ரா சிக்னல்வரை 20 நிமிடங்களுக்குள் வாகனங்கள் சென்றடைய முடியும். இந்த திட்டத்தை 3 மாதங்களுக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை நகரில் போக்குவரத்தை சீர்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு ‘உயிர்’ என்ற சமூகநல அமைப்பு முன்வந்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு நகரில் ரூ.5 கோடி உதவி செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி அவினாசிரோட்டில் தடையில்லா போக்குவரத்துக்கு நவீன சிக்னல்கள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் உயிர் அமைப்பு முன்வந்துள்ளது.