கரூர்–கோவை 6 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிப்பு கைவிடக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு


கரூர்–கோவை 6 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிப்பு கைவிடக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 Oct 2018 4:30 AM IST (Updated: 15 Oct 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

கரூர்– கோவை இடையே 6 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனை கைவிடக்கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார்.

இதில் பொதுமக்கள் நடைபாதை, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, ரே‌ஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அரிமன்னன் தலைமையில் அன்னூர் ஒன்றியம் செம்மாணி செட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

எங்கள் பகுதியில் 70–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் மழை தண்ணீர் செல்லும் வகையில் அரசு சார்பில், நீர் ஓடை அமைக்கப்பட்டது. அந்த நீர் ஓடை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மழை காலங்களில் அந்த ஓடையில் செல்லவேண்டிய நீரானது பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றது. மழை நீருடன் வி‌ஷ ஜந்துகள் வீடுகளில் தஞ்சம் அடைகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள நீரோடையை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மேற்கு நகரக்குழு செயலாளர் ஜேம்ஸ் தலைமையில் முத்தண்ணன் குளக்கரையோரம் வசித்து வரும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 21–வது குமாரசாமி காலனி முத்தண்ணன் குளக்கரையோரம் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடங்களை மீட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களை உடனடியாக காலி செய்யும்படி குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு வீரகேரளம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் வீட்டு மனை பட்டாவுடன் கூடிய வீடுகள் கட்டி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கரூர் முதல் கோவை வரை ரூ.2 ஆயிரத்து 400 கோடி செலவில் 6 வழி பசுமைச்சாலை (என்.எச்.67) அமைக்க மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் பி.ஏ.பி. பாசன பகுதிகள் உள்பட பல்வேறு விளை நிலங்கள், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், நீர் நிலைகள், பொதுமக்கள் குடியிருப்புகள், 25–க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படும் சூழல் ஏற்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதற்கு மாற்றாக கரூர் முதல் கோவை வரை ஏற்கனவே உள்ள என்.எச். 81 சாலையை விரிவாக்கம் செய்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். மேலும் மேற்கொண்டு நிலம் கையகப்படுத்த தேவையில்லை. இதனால் சாலை விரிவாக்க திட்ட செலவும் குறையும். எனவே புதிய பசுமை வழிச்சாலை சாலைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story