ஊட்டியில் லாரிகள் மூலம் குடிநீர் விற்பது நிறுத்தம்


ஊட்டியில் லாரிகள் மூலம் குடிநீர் விற்பது நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Oct 2018 4:00 AM IST (Updated: 16 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் லாரிகள் மூலம் குடிநீர் விற்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிகுதியாக இருக்கும். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. சுற்றுலா பயணிகளை நம்பி ஊட்டியில் 900–க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகரில் 25 வீடுகள் இருக்கின்றன. இந்த விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு நகராட்சி மூலம் கோரிசோலை, கோடப்பமந்து, பார்சன்வேலி உள்பட 9 அணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் தனியார் சார்பில் 40 லாரிகளில் விடுதிகளுக்கு குடிநீர் விற்கப்பட்டு வந்தது. அதற்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக ரீதியில் குடிநீர் விற்கப்படுவதால், அதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஊட்டியில் லாரிகள் மூலம் குடிநீர் விற்பது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து குடிநீர் வினியோக லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

ஊட்டி மலைப்பிரதேசமாக இருப்பதால் உயரமான இடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது லாரிகள் மூலம் குடிநீர் விற்கப்பட்டது. மேலும் மின்சார துண்டிப்பு மற்றும் குழாய்கள் உடைப்பு ஏற்படும் நேரங்களில் தட்டுப்பாட்டை போக்க கோவில் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் குடிநீர் விற்பனை செய்து வந்தோம். சமவெளி பகுதிகளில் நிலத்தடி நீர் ஆழ்துளை கிணறு மூலம் உறிஞ்சப்படுகிறது. ஆனால் நீலகிரியில் அப்படி அல்ல. மழைக்காலங்களில் எங்களது நிலங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் உயருகிறது. அதை தான் கொய்மலர் சாகுபடி, காளான் உற்பத்தி போன்ற விவசாயத்துக்கு வழங்கி வந்தோம். இவ்வாறு ஊட்டி நகர மக்களும் பயனடைந்து வந்தனர். தற்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் எங்களிடம் தெரிவித்ததால், லாரிகளில் குடிநீர் விற்பனையை நிறுத்தி கொள்கிறோம். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் விடுதிகள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி விளைநிலங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விற்க நீலகிரிக்கு மட்டும் ஐகோர்ட்டில் விதி விலக்கு பெற்று தர அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story