ரெடிமேட் ஆடைகளுக்கு மவுசு: நலிவடைந்து வரும் தையல் தொழில் - மானியம் வழங்கி பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை


ரெடிமேட் ஆடைகளுக்கு மவுசு: நலிவடைந்து வரும் தையல் தொழில் - மானியம் வழங்கி பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2018 4:45 AM IST (Updated: 16 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ரெடிமேட் ஆடைகளுக்கு மவுசு கூடியதால், தையல் தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் மானியம் வழங்கி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய 3 அத்தியாவசிய தேவைகளை ஒருவர் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதை நோக்கியே எந்திரமயமான வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஆள்பாதி, ஆடை பாதி என்பது முன்னோர் சொல். ஆண்டுக்கு 1 அல்லது 2 முறை மட்டுமே புதிய ஆடைகளை வாங்கி, உடுத்திய காலம் தற்போது மாறிவிட்டது. பண்டிகை காலம் நெருங்கிவிட்டால் புதிய துணிகள் வாங்க ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதே அளவு கூட்டம் தையல் கடைகளிலும் நிரம்பி வழியும். வாடிக்கையாளர்களிடம் இருந்து துணிகளை வாங்கி ஆடை தைத்து கொடுக்க தையல் கலைஞர்கள் இரவு, பகலாக உழைக்க வேண்டி இருந்தது. மேலும் அதற்கு ஏற்ற கூலியும் அவர்களுக்கு கிடைத்தது.

அன்றைய காலக்கட்டத்தில் தையல் கலைஞர்களுக்கு என்று சமுதாயத்தில் தனி மரியாதை இருந்து வந்தது. ஆனால் தற்போது ரெடிமேட் ஆடைகளின் வரத்து தையல் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்க வைத்துவிட்டது என்றே கூறலாம். மலிவான விலை, தையல் கூலி மிச்சம், காலத்துக்கு ஏற்ற வடிவங்கள் போன்றவை துணி வாங்கி தைத்து உடுத்தி வந்த மக்கள் ரெடிமேட் ஆடைகள் பக்கம் சாய்வதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது. பண்டிகை நாட்களில் நிச்சயம் புதிய ஆடைகளை தைத்து உடுத்திவிட வேண்டும் என்ற ஆவலில் தையல் கடைகளின் முன்பு மொய்த்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் கூட்டம் தற்போது இல்லை.

இன்றைய காலத்தில் ரெடிமேட் ஆடைகளை விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விதவிதமான ஆடைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

மக்களை கவரும் வகையில் நவநாகரீக ரெடிமேட் ஆடைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இதனால் தையல் தொழிலை நம்பி வாழும் தையல் கலைஞர்கள் வேலையிழந்து உள்ளனர். மேலும் கடை வாடகை, மின்சார கட்டணம் மற்றும் குடும்ப செலவு போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி விட்டனர். மேலும் தொழிலும் நலிவடைந்து வருகிறது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தையல் தொழிலை நம்பிக்கையுடன் மேற்கொள்வது என்ற வெறுப்பில் பெரும்பாலான தையல் கலைஞர்கள் வேறு பணிக்கு சென்று விட்டனர். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் தையல் தொழில் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து தையல் கலைஞர் சியாமளன் கூறியதாவது:–

நானும், எனது சகோதரரும் கடந்த 40 ஆண்டுகளாக தையல் தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இப்போதைய காலக்கட்டத்தில் தொழில் அழிந்து வருவது உண்மையே. மலிவான விலையில் ரெடிமேட் ஆடைகள் விற்பனை அதிகரித்து விட்டது. பண்டிகை காலங்களில் புது துணிகள் எடுத்து ஆடை தைக்க வாடிக்கையாளர்கள் தையல் கடைகளை தேடி வந்த நிலை இருந்தது. அப்போது கூடுதல் தொழிலாளர்களை வைத்து இரவு, பகலாக தொழில் நடைபெற்று வந்தது. அப்படி இருந்தும் துணிகளை தைத்து கொடுக்க முடியாமல், பண்டிகை நாட்களிலும் அதை கொண்டாட முடியாமல் வாடிக்கையாளர்களுக்கு துணிகளை தைத்து கொடுத்து வந்த காலம் உண்டு. ஆனால் இப்போது நிலைமை தலை கீழாகி விட்டது. பள்ளிக்கூட சீருடைகள் மட்டுமே தைப்பதற்கு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ரெடிமேட் ஆடைகளை மக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டதால், தையல் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தையல் கடை உரிமையாளர் சிவதாஸ் கூறியதாவது:–

ஒரு காலத்தில் தையற்கலை பயில இளைஞர்கள் இடையே அதிக ஆர்வம் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த உடன் தையற்கலையை கற்று கொண்டேன். 28 ஆண்டுகளுக்கு மேலாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான துணிகளை வாங்கி, தையல் கடைகளில் கொடுத்து தைத்து அணிந்து வந்தனர்.

தற்போது மக்களிடம் ரெடிமேட் ஆடைகளின் மோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் துணிகள் எடுத்து, தைத்து உடுக்க யாரும் விரும்புவது இல்லை. பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும் சீசனுக்கு பிறகு, ஆண்டின் மீதமுள்ள காலங்களில் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லை. இன்னும் 10 ஆண்டுகளில் தையல் கலைஞர்கள் மற்றும் தையல் கடைகள் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தையல் கலைஞர் சீனிவாசன் கூறும்போது, தையல் கடைகளில் ஆண்டு முழுவதும் துணி தைக்கும் வேலை சுறுசுறுப்பாக நடக்கும். இதனால் தையல் தொழிலில் ஓய்வு என்பதே இல்லை. நாளடைவில் குறைவான விலையில் ரெடிமேட் ஆடைகள் வரத்தொடங்கியதால் தொழில் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. துணி தைக்கும் பணத்தில் ரெடிமேட் ஆடைகள் வாங்கி விடலாம் என்று மக்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தையல் தொழில் முழுவதுமாக அழிந்து வருகிறது. போதிய வருமானம் கிடைப்பது இல்லை. வறுமையில் வாடி வருகிறோம் என்றார்.

தையல் கடை உரிமையாளர் சத்தியன்பாபு கூறியதாவது:–

கடந்த 1981–ம் ஆண்டு தையல் கடை தொடங்கி, இன்று வரை தொழில் செய்து வருகிறேன். 10 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி கடை நடத்தி வந்தேன். காலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை வேலை நடந்து கொண்டே இருக்கும். தையல் தொழிலை கற்க விடுமுறை காலங்களில் மாணவர்கள் வந்து பயிற்சி பெற்று செல்வார்கள். இப்போது யாரும் வருவது இல்லை. ஆனால் இப்போது ரெடிமேட் ஆடைகள் மீது மக்களுக்கு ஆர்வம் மிகுந்துவிட்டது. இதனால் தையல் தொழிலுக்கு தொழிலாளர்களும் கிடைப்பது இல்லை. போதிய வருமானம் இல்லாததால், இருக்கும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க முடியவில்லை. இவ்வளவு ஆண்டுகள் கடை நடத்தி விட்டு, இப்போது வேறு தொழிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் குறைந்தளவு வாடிக்கையாளர்களை கொண்டு தையல் தொழிலை தொடர வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முஜீப் கூறியதாவது:–

பிராண்டட் கம்பெனிகள் ரெடிமேட் ஆடைகள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் தாக்கம் தையல் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. இன்றைக்கு தையல் தொழிலை கற்று கொள்ள எதிர்கால தலைமுறையினர் முன்வருவது இல்லை. அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து விட்டது. இதனால் தையல் கூலியையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இன்றைக்கு தையல் கூலிக்கான செலவில், ரெடிமேட் ஆடைகளை மார்க்கெட்டில் வாங்கி விடலாம்.

இதனால் பொதுமக்களும் ரெடிமேட் ஆடைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதே நிலை நீடித்தால் தையல் தொழில் இல்லாமல் போய் விடும். பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் வழங்கக்கூடிய ரெடிமேட் ஆடைகளை போல் தையல் கலைஞர்களாலும் வழங்க முடியும். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளதால், போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தையல் தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தையல் தொழிலுக்கான தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும். அதில் முறையாக பயிற்சி பெற்ற தையல் கலைஞர்களுக்கு வட்டி இல்லாத கடனுதவி மற்றும் மானியம் அளிக்க வேண்டும். இவ்வாறு அரசு சலுகைகள் வழங்கினால் கார்ப்பரேட் கம்பெனிகள் வழங்கக்கூடிய ரெடிமேட் ஆடைகளின் விலையை விட தையல் கலைஞர்களும் குறைவான விலையில் பொதுமக்களுக்கு ரெடிமேட் ஆடைகளை தைத்து விற்க முடியும். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சங்கம் மூலம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story