கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் நுழைந்த கரடி; பொதுமக்கள் பீதி


கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் நுழைந்த கரடி; பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 16 Oct 2018 3:30 AM IST (Updated: 16 Oct 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் கரடி நுழைந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி மனித–வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. கோத்தகிரியில் காம்பாய்கடை, கார்சிலி, ரைபில் ரேஞ்சு, அரவேனு, ஜக்கனாரை, கேத்தரீன் நீர்வீழ்ச்சி, மூனுரோடு, நெடுகுளா, குருக்குத்தி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி நடமாட்டம் தொடர் கதையாக இருக்கிறது. கடந்த சில நாட்களில் எஸ்.கைகாட்டி பகுதியில் 3 முறை பேக்கரிக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்துள்ளன. அவற்றை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரவேனு அருகே ஆடுபெட்டு, ஓமக்குளி குடியிருப்பு பகுதிகளுக்குள் நேற்று முன்தினம் மாலை ஒரு கரடி நுழைந்தது. அந்த கரடி ஓமக்குளி குடியிருப்பு பகுதியில் உள்ள நடைபாதையில் உலா வந்தது. இதை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து, அலறியடித்துக்கொண்டு தங்களது வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து கரடியை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:–

ஆடுபெட்டு, ஓமக்குளி பகுதியில் 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள கரடிகள் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மொக்கை கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவன்–மனைவி கரடி தாக்கி உயிரிழந்தனர். மேலும் கரடியை விரட்ட முயன்ற வனத்துறையினரும் பலியானார். பின்னர் அந்த கரடி சுட்டுக்கொல்லப்பட்டது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக தற்போது குடியிருப்புக்குள் புகுந்து வரும் இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story