வேளாங்கண்ணி அருகே ரூ.1½ லட்சம் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது லாரி பறிமுதல்


வேளாங்கண்ணி அருகே ரூ.1½ லட்சம் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2018 4:15 AM IST (Updated: 16 Oct 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே ரூ.1½ லட்சம் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் மதுகடத்தலை தடுக்கும் படி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், காசிமணி, மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வேளாங்கண்ணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரியை மறித்தனர். அப்போது லாரி நிற்காமல் பரவையில் உள்ள கடற்கரை சாலையை நோக்கி சென்றது. உடனே போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் சோதனை செய்த போது அதில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 820 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அபிராமி அம்மன் மேல தெருவை சேர்ந்த முருகன் (வயது 41) என்பதும், அவருக்கு சொந்தமான லாரியில் காரைக்காலில் இருந்து மதுரைக்கு மதுபாட்டில்களையும் கடத்தியதும் தெரிய வந்தது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் லாரியையும், மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story