தூத்துக்குடி அருகே: மீனவர் கொலையில் 2 பேர் கைது


தூத்துக்குடி அருகே: மீனவர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2018 3:15 AM IST (Updated: 16 Oct 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சோட்டையன்தோப்பை சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). மீனவர். இவருடைய சித்தப்பா தங்கபாண்டி என்பவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முள்ளக்காடு நேருஜிநகரை சேர்ந்த முத்து மகன் மாரிச்சாமி(44) என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தாராம். இதனால் முருகேசன், மாரிச்சாமியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்தநிலையில் தசராவையொட்டி வேடம் அணிந்து இருந்த முருகேசன் நேற்று முன்தினம் முள்ளக்காடு முனியசாமி நகருக்கு சென்றார். அங்கு நின்ற மாரிச்சாமியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார். இதில் சுதாரித்த மாரிச்சாமி உள்ளிட்டோர் சேர்ந்து தாக்கி, முருகேசன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார்.

மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாரிச்சாமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் மாரிச்சாமி மற்றும் முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்த முத்துசாமி மகன் மூக்காண்டி (39), ராஜீவ்நகரை சேர்ந்த வேல்சாமி மகன் அந்தோணி ராஜ் (37) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் முள்ளக்காடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மூக்காண்டி, அந்தோணிராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 

Next Story