ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 Oct 2018 10:45 PM GMT (Updated: 15 Oct 2018 7:55 PM GMT)

ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆலத்தூரில் இருந்து அரியலூர் வரை செல்லும் சாலையில் குன்னம் உட்கோட்டத்தில் இலுப்பைக்குடி, பிலிமிசை, கூத்தூர் ஆகிய மூன்று கிராமங்களில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிலிமிசை, கூத்தூர் ஆகிய 2 கிராமங்களில் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.

ஆனால் இலுப்பைக்குடியில் மட்டும் தார்ச்சாலை போடும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமலும் தார்ச்சாலை போடுவதற்கான உத்தேச பணிகள் நடந்து வருகிறது. அவ்வாறு தார்ச்சாலை அமைத்தால் மழைநீர், கழிவுநீர் புதிதாக போடப்படும் தார்ச்சாலையில் தேங்கி நிற்கும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

குன்னம் தாலுகா ஓதியம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், ஓதியம் கிராமத்தில் அமைந்துள்ள சுத்துக்குளத்திற்கு செல்லும் மழைநீர் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

குன்னம் தாலுகா கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினருமான அழகுமாமன்னன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களில் புதிதாக வருவாய் கிராமங்களை உருவாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக ஆலத்தூர் ஒன்றியத்தை 2-ஆக பிரித்து பிலிமிசை அல்லது கொளக்காநத்தத்தை ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Next Story