சொத்து தகராறில் உறவினர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவர் உள்பட 2 பேர் கைது


சொத்து தகராறில் உறவினர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2018 9:30 PM GMT (Updated: 15 Oct 2018 8:18 PM GMT)

பாளையங்கோட்டையில் சொத்து தகராறில் உறவினர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேட்டை, 

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 29). ஆம்னி கார் ஓட்டி வருகிறார். இவருடைய அக்காளை வி.எம்.சத்திரம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளார். இந்த நிலையில் கார்த்திகேயன் குடும்பத்துக்கும், அக்காள் மாமனார் பால்ராஜ் (58 ) குடும்பத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் தனது காரில் வி.எம்.சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரது காரில் நண்பர்கள் தேவந்திரன் மகன் ஆசைத்தம்பி (22) மற்றும் முருகன் (23) ஆகியோர் இருந்தனர்.

அப்போது பால்ராஜ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதைக்கண்ட கார்த்திகேயன், காரை வேகமாக ஓட்டிச்சென்று அவர் மீது ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சுதாரித்து விலகி ஓடியுள்ளார். ஆனாலும் கார் பக்கவாட்டில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதில் காயம் அடைந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார்்த்திகேயன் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி கூட்டாளிகளுடன் தப்பி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் காரின் முன்பகுதி சேதம் அடைந்திருந்த நிலையில், 3 பேரும் நெல்லை டவுனை கடந்து பழைய பேட்டை சோதனை சாவடி அருகில் சென்றனர்.

பழைய பேட்டை சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு கண்ணன் தலைமையில் போலீசார், சேதம் அடைந்த நிலையில் இருந்த அந்த காரை போலீசார், தடுத்து நிறுத்தினர். கார் நின்ற உடன் அதிலிருந்து முருகன் கீழே இறங்கி தப்பி ஓடினார். காரில் இருந்த கார்த்திகேயன் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சொத்து தகராறு முன்விரோதத்தில் உறவினர் பால்ராஜ் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்துவிட்டு கார்த்திகேயன் கூட்டாளிகளுடன் தப்பி வந்தது தெரியவந்தது.

கொலை முயற்சி சம்பவம் நடந்த இடம் பெருமாள்புரம் போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால், கார் மற்றும் 2 பேரும் பெருமாள்புரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஆசைத்தம்பியை கைது செய்தனர். தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story