சிதம்பரத்தில்: விஷவாயு தாக்கி தொழிலாளி பலி - பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்


சிதம்பரத்தில்: விஷவாயு தாக்கி தொழிலாளி பலி - பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
x
தினத்தந்தி 16 Oct 2018 3:30 AM IST (Updated: 16 Oct 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி தொழிலாளி பலியானார்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மின்நகர் 6-வது குறுக்கு தெருவில் நகராட்சி பூங்கா அருகில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளியான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆத்தனூர் மூனுமுளைக்காடு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் கந்தசாமி (வயது 39) என்பவர் ஈடுபட்டார். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த 30 அடி ஆழ பாதாள சாக்கடை திட்ட குழிக்குள் கட்டுமான பலகை விழுந்து விட்டது. அந்த பலகையை எடுப்பதற்காக பாதாள சாக்கடை குழிக்குள் கந்தசாமி இறங்கினார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதை அறிந்த சக தொழிலாளி ஒருவர் அவரை தேடி அந்த குழிக்குள் இறங்கினார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், வெளியே வந்து விட்டார். இதற்கிடையில் அந்த குழிக்குள் இறங்கிய கந்தசாமி எவ்வித அசைவும் இன்றி கிடந்தார். உடன் இது பற்றி சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜேந்திரசோழன் (பொறுப்பு) மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குழிக்குள் கிடந்த கந்தசாமியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர் பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கிய போதே விஷ வாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது.

இதற்கிடையில் தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்த கந்தசாமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story