சிக்கனத்தை வலியுறுத்தி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர் வைத்திலிங்கம்
சிக்கனத்தை வலியுறுத்தி சட்டசபைக்கு புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் சைக்கிளில் வந்தார்.
புதுச்சேரி,
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
இந்தநிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று காலை புதுவை கந்தப்ப முதலி வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து உதவியாளர்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டியபடி சட்டசபைக்கு வந்தார். அவரை சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வரவேற்றார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாங்கள் சைக்கிளில் சென்றோம். இப்போது நீங்கள் சைக்கிளில் வருகிறீர்கள். வாழ்த்துகள் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக சட்டசபைக்கு சைக்கிளில் வந்தேன். இது அரசுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் நல்லது.
விழாவிற்கு ஒவ்வொரு அதிகாரிகளும் தனித்தனி காரில் வருகின்றனர். அதைவிட்டு பக்கத்தில் இருக்கும் பகுதிகளுக்கு சைக்கிளில் செல்லவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. என் உடல் ஒத்துழைப்பு தரும்வரை எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சைக்கிள் பயணம் மேற்கொள்வேன்.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.