கேளம்பாக்கத்தில் மகன் தற்கொலை செய்த வேதனையில் தாய் தீக்குளித்து சாவு
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் தற்கொலையால் மனவேதனை அடைந்த தாய் தீக்குளித்து இறந்தார்.
திருப்போரூர்,
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் கீழக்கோட்டையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி. இவரது கணவர் வெங்கடேசன் இறந்து விட்டார். இவருக்கு கோவிந்தராஜன்(வயது16) என்ற மகன் உள்ளார்.
கோவிந்தராஜன் தனக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தாயார் இந்திராணியிடம் கேட்டு வந்தார். ஆனால் அதற்கு அவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தர தன்னிடம் பணம் இல்லை என கூறிவிட்டார். இதனால் கோவிந்த ராஜன் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாயார் வேலைக்கு சென்றபின்னர் வீட்டில் தனியாக இருந்த கோவிந்தராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற இந்திராணி மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
நேற்று காலை உறவினர்கள் கோவிந்தராஜனின் உடலை வெளியே வைத்து இறுதி சடங்கு செய்து உடனடியாக உடலை அடக்கம் செய்தனர்.
மகன் இறந்த சோகத்தில் இருந்த இந்திராணி வீட்டில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் புதைக்கப்பட்ட கோவிந்தராஜனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்- மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story