வீட்டை விற்றவர் ரவுடிகளுடன் வந்து வெளியேற்றியதாக கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி ; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


வீட்டை விற்றவர் ரவுடிகளுடன் வந்து வெளியேற்றியதாக கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி ; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 3:00 AM IST (Updated: 16 Oct 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வசதி வாரிய வீட்டை விற்றவர், 20 ஆண்டுகள் கழித்து ரவுடிகளுடன் வந்து தங்களை வெளியேற்றியதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் ஓய்வு பெற்ற தாசில்தார் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்தவர் இளங்கோவடி (வயது 65). தனி தாசில்தாராக பணியாற்றிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு இவர், தனது மகள் சித்ரா (40), மகன் ராஜசேகர் (34), ராஜசேகரின் மனைவி காயத்திரி (24), ராஜசேகரின் மகள் தனஷ்ஸ்ரீ (5) ஆகியோருடன் வந்தார்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக ‘போர்ட்டிகோ’ முன்பு சென்று திடீரென தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களது மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இளங்கோவடி கூறுகையில், “நாங்கள் தாமரை நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்த வருகிறோம். குமரேசன் என்பவர் வீட்டு வசதி வாரியம் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு பெற்ற வீட்டை சில வருடங்கள் கழித்து என்னிடம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு விற்றார்.

என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டு வசதி வாரியம் அளித்த ஒதுக்கீட்டில் ஒரிஜினல் உத்தரவை என்னிடம் ஒப்படைத்து விட்டு நோட்டரி வக்கீல் மூலம் பத்திரமும் எழுதி கொடுத்தார். அதில் வீட்டு வசதி வாரியம் கடன் முடிந்த பிறகு என் பெயரில் அலாட்மெண்ட் ஆர்டரை மாற்றி தந்து விடுகிறேன் என்றார். தற்போது அவர், அந்த வீட்டை சிலரிடம் விற்று விட்டதாக கூறி 30 ரவுடிகளுடன் கடந்த 13-ந் தேதி வீட்டிற்கு வந்தார். அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் ரோட்டில் வீசிவிட்டு வயதான என்னையும், என் மனைவியையும் வெளியில் தள்ளி விட்டார்கள்.

இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் அவர்கள், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் நேரில் சென்று மனு அளித்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story