கலவையில்: மோட்டார் சைக்கிள்கள் திருடிய பள்ளி மாணவன், வாலிபர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


கலவையில்: மோட்டார் சைக்கிள்கள் திருடிய பள்ளி மாணவன், வாலிபர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2018 3:19 AM IST (Updated: 16 Oct 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

கலவையில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன், வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கலவை போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராணிப்பேட்டை,

கலவையை அடுத்த சென்னலேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். ஜெயச்சந்திரன் வேலைக்கு செல்லும்போது தனது மோட்டார் சைக்கிளை கலவை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் நிறுத்தி செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஜெயச்சந்திரனின் மோட்டார்சைக்கிள் கலவை பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கு அந்த மோட்டார்சைக்கிளை 2 பேர் எடுத்து செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கையும், களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒரு வாலிபர் பள்ளிகொண்டாவை அடுத்த ஓலக்காசி கிராமம் கெணுதென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி என்பவரின் மகன் வைரம் என்ற பிரபு (20) என்பதும், மற்றொருவர் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய மாணவன் என்பதும் தெரிய வந்தது.

பள்ளி மாணவனின் பாட்டி வீடு கலவை அருகே உள்ளதால் அடிக்கடி அங்கு அவன் வந்து சென்றுள்ளான். அப்போது பிரபுவும் உடன் வந்ததால் இருவரும் சேர்ந்து மோட்டார்சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டு திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று அதில் வரும் பணத்தை உல்லாசமாக செலவழித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரபு மற்றும் பிளஸ்-1 மாணவனை கலவை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் 2 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து மேலும் திருடிய மோட்டார்சைக்கிள்களை வேறு எங்காவது வைத்துள்ளனரா? இவற்றை வாங்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story