சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த விவசாயி
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 40), விவசாயி. இவர் நேற்று மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முருகன் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அவருடைய பையில் 2 லிட்டர் பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உடனே மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரித்தனர். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில், ‘முருகனின் தாத்தாவிற்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை சிலர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இந்த நிலத்தை தற்போது அவர்கள் கொடுக்க மறுத்ததுடன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முருகன் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகம் வந்தது‘ தெரியவந்தது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மேனகபிரியா(26) என்பவர் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் கலெக்டரை சந்தித்த அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி மனு கொடுத்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருடைய முகத்தில் தண்ணீரை தெளித்தனர். மேலும் அவர் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.
பின்னர் மேனகபிரியாவிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதில், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனு கொடுப்பதற்காக குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்துள்ளார். மேலும் அவர், காலையில் உணவு சாப்பிடாமல் வந்ததால் மயங்கி விழுந்தார்‘ என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story