சேலம் புதிய பஸ்நிலையத்தில் தம்பதியிடம் ரூ.1 லட்சம், 8 பவுன் நகை திருட்டு
சேலம் புதிய பஸ்நிலையத்தில் தம்பதியிடம் ரூ.1 லட்சம், 8 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் தனபால். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகனுக்கும் கும்பகோணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தநிலையில் கும்பகோணம் செல்வதற்காக புதிய பஸ் நிலையத்திற்கு தனபாலும், அவருடைய மனைவியும் வந்தனர்.
அப்போது ஒரு கைப்பையில் ரூ.1 லட்சம் மற்றும் 8 பவுன் நகையை வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பணத்தின் மூலம் திருமணத்திற்கு புடவை எடுக்க முடிவு செய்திருந்தனர். இதையடுத்து அந்த தம்பதியினர் கும்பகோணத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறினர். பின்னர் டிக்கெட் எடுக்க பையை பார்த்தபோது பையில் இருந்த பணம் மற்றும் நகையை காணாவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடி விட்டனர். இதனால் அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர். ஆனால் அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக தனபால், விஜயா ஆகியோர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். இதையடுத்து அவர்கள் வேறும் வழியில்லாமல் இரவு வீடு திரும்பி விட்டனர்.
இதையறிந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் இவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். இந்தநிலையில் நேற்று மீண்டும் விஜயா புகார் கொடுக்க சென்றார். அவரின் புகார் மனுவை பெற்றுக்கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story