தாளவாடி அருகே ரோட்டை கடந்த மலைப்பாம்பு, வாகனத்தில் அடிபட்டு சாவு
தாளவாடி அருகே ரோட்டை கடந்த மலைப்பாம்பு, வாகனத்தில் அடிபட்டு செத்தது.
தாளவாடி,
தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதி வழியாக ஆசனூரில் இருந்து பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு ஒன்று ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் என்ற இடத்தில் சாலையை கடந்து ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனத்தில் மலைப்பாம்பு அடிபட்டது. இதில் மலைப்பாம்பு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி செத்தது. மேலும் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அந்த மலைப்பாம்பின் மீது ஏறியதால் அதன் உடல் முழுவதும் சிதைந்து சாலையோடு சாலையாக ஒட்டிவிட்டது. அந்த வழியாக வந்த சிலர், மலைப்பாம்பு ஒன்று ரோட்டில் உடல் நசுங்கி இறந்து கிடந்ததை கவனித்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று வாகனம் ஏறியதில் நசுங்கி இறந்து கிடந்த மலைப்பாம்பை பார்வையிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இறந்து கிடந்தது சுமார் 15 அடி நீள மலைப்பாம்பு ஆகும். இரவு நேரத்தில் ரோட்டை கடந்தபோது வாகனத்தில் அடிபட்டு இறந்து உள்ளது. இங்கு இரவு நேரத்தில்தான் வனஉயிரினங்கள் சாலையை கடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது வனஉயிரினங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story