கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: ரூ.4 லட்சத்தை கடனாக வாங்கியவர் ஏமாற்றியதால் விரக்தி
கடனாக ரூ.4 லட்சம் வாங்கியவர் அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் விரக்தி அடைந்த பெண் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை, கடனுதவி, பொதுநல மனுக்கள் என 474 மனுக்கள் பெறப்பட்டன.
பள்ளிகொண்டா எஸ்.வி.எம். நகரை சேர்ந்த மும்தாஜ் என்ற திருநங்கை தலைமையில் 11 திருநங்கைகள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “திருநங்கைகளான நாங்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறோம். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வீடோ, இடமோ இல்லை. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அணைக்கட்டு ஒன்றியம் செதுவாலை வல்லண்டராமம் நரிக்குறவர் காலனி அருகே புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
நாட்டறம்பள்ளி தாலுகா காந்திநகர் சின்னூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், “கடந்த 22 ஆண்டுகளாக பாறை புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். பலமுறை இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைவருக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
மணல் எடுக்க எதிர்ப்பு
மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் ஏற்கனவே மணல் குவாரி தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் நவ்லாக் பகுதியில் மாட்டுவண்டிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்கும் பொதுமக்களை அடியாட்களை வைத்து கடத்தல்காரர்கள் மிரட்டுகின்றனர். மணல் கடத்தலால் நிலத்தடி நீர்குறைந்து வருகிறது. எனவே மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
மக்கள் நீதி மய்யத்தின் வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் சிவக்கொழுந்து தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், “வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
ஜோலார்பேட்டை எஸ்.கோடியூரை சேர்ந்த ரகுநாதன் மனைவி ரேவதி (வயது 37). இவர் தனது மகன் அரவிந்த் (16), மோனிகா (14) ஆகியோருடன் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்தார். மதியம் 12.30 மணியளவில் ரேவதி, கலெக்டர் அலுவலக ‘போர்டிகோ’ அருகே சென்று பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பெண் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
அவர் வைத்திருந்த மனுவில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது கணவர் ரகுநாதன் உயிரிழந்து விட்டார். அவரது இன்சூரன்ஸ் பணமாக ரூ.4 லட்சம் கிடைத்தது. அதனை தனியார் பள்ளி ஆசிரியர் கடனாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார். கொடுத்த பணத்தை அவர் இதுவரை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகள் மோனிகா தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே நான் கடனாக கொடுத்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பேபி இந்திரா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story