முதல்முறையாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பெரிய சரக்கு கப்பல் வந்தது


முதல்முறையாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பெரிய சரக்கு கப்பல் வந்தது
x
தினத்தந்தி 16 Oct 2018 1:20 PM IST (Updated: 16 Oct 2018 1:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு முதல்முறையாக 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு முதல்முறையாக 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தது.

பெரிய சரக்கு கப்பல்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்குள் வரும் வகையிலும் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி தற்போது 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல் வருவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பனாமா நாட்டை சேர்ந்த எம்.வி.ஜேன்ஜீன் என்ற 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல் இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றி வந்தது. 229 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 74 ஆயிரத்து 962 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. வடக்கு சரக்கு தளத்தில் கப்பல் நிறுத்தப்பட்டது.

வரவேற்பு

இதைத்தொடர்ந்து கப்பல் கேப்டன்கள் கிங்ஸ்டன் நீல்துரை, வெங்கடேஷ் ஆகியோரை தூத்துக்குடி வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி வரவேற்றார். தொடர்ந்து அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடல்வள துணை பாதுகாவலர் பபோடோஸ் சந்த் மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இதற்கு முன்பு அதிகபட்சமாக 13.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட சரக்கு கப்பல் கடந்த ஜூன் மாதம் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய் கூறும்போது, ‘14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதால், துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மேம்படும் வகையில், நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ராக் பாஸ்பேட் மற்றும் இதர சரக்குகளை கையாள முடியும். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயல்படுத்த உள்ளது‘ என்றார்.

ரூ.400 கோடி

வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி கூறும்போது, ‘இந்த மாத இறுதிக்குள் 14 மீட்டர் வரை மிதவை ஆழம் கொண்ட கப்பல் கையாளப்படும் என்று அறிவித்து இருந்தோம். அதன்படி இன்று (நேற்று) முதல்முறையாக இந்த கப்பல் கையாளப்பட்டு உள்ளது. இதுபோன்று கப்பல்கள் தொடர்ந்து கையாளப்பட உள்ளது. நிலக்கரி மட்டுமின்றி பிற சரக்குகளும் இறக்குமதி செய்யப்படும். இதுபோன்ற வசதிகளால் துறைமுகத்தில் போக்குவரத்து அதிகரிப்பதுடன் குறைந்த செலவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும். இதைத்தொடர்ந்து ரூ.400 கோடி செலவில் உள்துறைமுகத்தின் ஆழம் 14.5 மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. அந்த பணி முடிவடைந்த உடன் துறைமுகத்தின் மிதவை ஆழம் 16 மீட்டராக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது‘ என்றார்.

Next Story