தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு 5 மாதத்துக்கு பின் இறந்த பரிதாபம்


தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு 5 மாதத்துக்கு பின் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:00 AM IST (Updated: 16 Oct 2018 7:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் 5 மாதத்துக்கு பின் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் 5 மாதத்துக்கு பின் பரிதாபமாக இறந்தார்.

தனியார் நிறுவன ஊழியர் 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் ஜஸ்டின் செல்வ மிதிஷ்(வயது 29). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த மே மாதம் 22–ந் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினார். இந்த கலவரத்தின் போது போலீசார் நடத்திய தடியடியில் ஜஸ்டின் செல்வ மிதிஷ் தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு கடந்த 22–5–2018 முதல் 29–6–2018 வரை உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேலும் கலவரத்தில் காயம் அடைந்ததால் அரசு சார்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் ஜஸ்டின் செல்வமிதிசுக்கு வழங்கப்பட்டது.

மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி 

இந்த நிலையில் ஜஸ்டின் செல்வ மிதிசின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 23–9–2018 அன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, அதற்கான சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பிறகு கடந்த 9–ந் தேதி டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து விட்டு, 10–ந் தேதி மீண்டும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்தார்.

சாவு 

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் ஜஸ்டின் செல்வமிதிஷ் பரிதாபமாக இறந்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று காயம் அடைந்தவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் ஏற்கனவே 13 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story