குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை


குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 16 Oct 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் மீனவ கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

அத்துடன், கிராம சபை கூட்டங்களில் புகார் தெரிவித்து, 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பின்பும் தண்ணீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.


இதையடுத்து கடியபட்டணம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் குருந்தன்கோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, கலெக்டர் அலுவலக பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு பணிக்கு வந்திருந்தார்.

அவரை பெண்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு தங்களது குடிநீர் பிரச்சினையை எடுத்து கூறினர். அவர்களிடம் ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, குடிநீர் சீராக வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story