மண்ணிவாக்கத்தில் ஆராய்ச்சி மாணவரை சரமாரியாக வெட்டி நகை, பணம் பறிப்பு
மண்ணிவாக்கத்தில் ஆராய்ச்சி மாணவரை சரமாரியாக வெட்டி நகை மற்றும் பணத்தை பறித்தனர். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டலூர்,
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 29). இவர் மண்ணிவாக்கம் விவேகானந்தர் நகரில் உள்ள தெரிந்த பெண் ஒருவர் வீட்டில் தங்கி, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாபு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை மர்ம நபர்கள் தொடர்ந்து தட்டி கொண்டிருந்தனர்.
தூங்கிக்கொண்டிருந்த பாபு எழுந்து சென்று கதவை திறந்து பார்க்கும் போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் பாபுவை மடக்கி பிடித்து சரமாரியாக அரிவாளால் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, செல்போன், ரூ.800 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
பாபுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பாபு ரத்தக்காயங்களுடன் இருந்தார். உடனடியாக பாபுவை அவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
பாபுவை வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல் உண்மையிலே கொள்ளையடிப்பதற்காக பாபுவை வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வெட்டினார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் ஓட்டேரி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.