கடலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை இறுக்கி கொலை : 5 பவுன் நகைக்காக நடந்த கொடூரம்


கடலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை இறுக்கி கொலை : 5 பவுன் நகைக்காக நடந்த கொடூரம்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:15 AM IST (Updated: 17 Oct 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். 5 பவுன் நகைக்காக நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,


கடலூர் அருகே உள்ள கண்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சங்கீதா(வயது38). இவர்களுக்கு ஞானசவுந்தரி(12) என்ற மகளும், ஜெயகணேஷ்(8) என்ற மகனும் உள்ளளர். கோபால், குண்டு உப்பலவாடி தியாகமுதலி நகரில் வீட்டு மனை வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு கொடுத்து இருந்தார். அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்து விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த வீடு காலியாக இருந்ததால் அவ்வப்போது யாராவது வந்து வீட்டை பார்த்து சென்றனர்.
நேற்று காலையில் கோபால் கட்டிட வேலைக்கு சென்ற பின் சங்கீதா தனது பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் குண்டு உப்பலவாடியைச்சேர்ந்த ஒரு பெண், சங்கீதாவின் வீட்டை வாடகைக்கு பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது சங்கீதா வீட்டின் முன்கதவு பூட்டிக்கிடந்தது. இதனால் அந்த பெண் தனது மகளை அனுப்பி பின்பக்கத்தில் உள்ள சமையல் அறையில் சங்கீதா இருக்கிறாரா? என பார்த்து வருமாறு கூறினார்.

அதனால் அந்த சிறுமி வீட்டின் பின்பக்கத்தில் உள்ள சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, சங்கீதா தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டுக் கொண்டே வெளியே ஓடிவந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் வந்து சமையல் அறைக்குள் பார்த்த போது சங்கீதா தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது கழுத்திலும், நாடியிலும் காயம் இருந்தது, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. யாரோ, அவரை தாக்கி தங்க சங்கிலியை மட்டும் கொள்ளையடித்துச்சென்றிருந்தது தெரியவந்தது.

இது பற்றி தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சங்கீதாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக செத்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த படுகொலை சம்பவம் பற்றி தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த குண்டுஉப்பலவாடி தியாக முதலி நகரில் உள்ள சங்கீதாவின் வீட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் தடயவியல் நிபுணர்களும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து சமையல் அறையில் படிந்திருந்த ரத்தக்கறையையும், அந்த அறையில் பதிவாகியிருந்த விரல் ரேகைகளையும் மற்ற தடயங்களையும் சேகரித்தனர்.

போலீஸ் மோப்பநாய் அர்ஜூனும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிச்சென்று அருகில் உள்ள ஜெயலட்சுமி நகரில் நின்றது. எனவே கொலையாளி அப்பகுதியை சேர்ந்தவனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாலை 3.30 மணி அளவில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சங்கீதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தவர், அவரது குடும்பத்துக்கு தெரிந்த நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் தான் இச்சம்பவம் நடந்தபோது வெளியில் தெரியவில்லை.

அந்நிய நபராக இருந்தால் சங்கீதா கூச்சல் போட்டுக்கொண்டு வெளியே ஓடி வந்து இருக்கலாம். எனவே அவருக்கு தெரிந்த நபரே கொலை செய்து உள்ளார்.

எனவே நகைக்காக கொலை நடந்ததா? அல்லது அந்த நபர் தவறான நோக்கத்தில் அவரை அணுகிய போது அவர் மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக சங்கீதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பவுன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story