காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்; அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்; அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 17 Oct 2018 4:45 AM IST (Updated: 17 Oct 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13 கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையில் 60 சதவீதம் நீர் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும், கிடைக்கிற நீரை சேமிக்கிற வகையில் நீர்நிலைகளை தயார் நிலையில் வைத்தல், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு பணி, மீட்பு மற்றும் நிவாரண பணிகள், நிவாரண முகாம்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஆய்வில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டும் அளவில் எந்தவித வெள்ள அபாயத்தையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 515 இடங்கள் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டு அதற்கு 50 பல்வேறு துறைகள் உள்ளடக்கிய மண்டல குழுக்கள், வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. தகவல் அளிக்கும் நபர்கள் 3,458 பேர் கண்டறியப்பட்டு அதில் 1,231 பெண்கள் தங்களை அதில் ஈடுபடுத்தியுள்ளனர். விலங்கினங்களை பாதுகாக்க 106 முதல் நிலை பொறுப்பாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 1,270 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 1,281 பாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 3,878 சிறுபாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலமாக 48 பணிகளும் 264 ஏரிகள் மற்றும் 2 அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு ரூ.220.89 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி துறை மூலமாக 103 பணிகள் ரூ.17 கோடியே 83 லட்சம் மதிப்பிலும், பேரூராட்சிகள் துறை மூலமாக 55 பணிகள் ரூ.13 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 80 பணிகள் ரூ.118 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர துறைகள் மூலமாக 30 பணிகள் ரூ.23 கோடி மதிப்பிலும் ஆக மொத்தமாக 316 பணிகள் ரூ.393.75 கோடி மதிப்பீட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story