பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் பூர்வீக வைகை பாசன சங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரையில் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட (சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள்) பூர்வீக வைகை பாசன சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் முருகன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசியதாவது, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும்.
வைகை அணை கட்டப்பட்ட பின்பு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. மேலும் வைகையில் தண்ணீர் வராமல் வானம் பார்த்த பூமியாக மாறிவிட்டது. மழையை நம்பி பயிரிடும் மானாவாரி விவசாயிகளாக ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் மாறிவிட்டனர். வைகை அணையில் நீர்வரத்து பகுதிகளில் சண்முகாநதி அணை, மஞ்சளாறு அணை உள்ளிட்ட பல அணைகள் கட்டியதால் நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.
மதுரை மாவட்ட விவசாயிகளுக்காக புதிய புதிய கணக்கெடுப்பு என்ற பெயரில் ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை அணையில் 66 கனஅடி தண்ணீர் உள்ளது. எனவே உடனடியாக ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் மழையை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
தற்சமயம் வைகை ஆறும் ஈரப்பதமாக உள்ளது. எனவே இந்த நேரத்தில் வைகை அணை திறக்கப்பட்டால் தண்ணீர் சேதாரமன்றி கண்மாய்களுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.