தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறை; தலா ரூ.60 லட்சம் அபராதம்; இலங்கை கோர்ட்டு உத்தரவு


தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறை; தலா ரூ.60 லட்சம் அபராதம்; இலங்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 17 Oct 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும், தலா ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமேசுவரம்,

தூத்துக்குடியில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 18–ந்தேதி ஒரு படகில் அந்தோணி, ரூபின்சன், வில்பர்ட், ரமேஷ், ஆரோக்கியம், பாக்கியம், வினோத் உள்பட 8 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இலங்கையின் கல்பட்டி கடற்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீர்கொழும்பு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் தூத்துக்குடி மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும், தலா ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் அங்குள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தூத்துக்குடி மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக 7 குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

இதனால் மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக்கொண்டு கரை திரும்ப முயன்றனர். ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்தனர். இதனால் பெரும்பாலான மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேசுவரம் மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்றிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம், மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story