பாகூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி; குடிபோதையில் நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
பாகூர் அருகே குடிபோதையில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர்,
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 28). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று முன்தினம் மாலை பாகூர் அருகே கொமந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள பழுதடைந்த பாலத்தில் அமர்ந்து மது குடித்தார். பின்னர் அவர்கள் ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.
இரவு நேரமானதால் மணிமாறனின் நண்பர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆனால் மணிமாறனை காணவில்லை. அவர் முன்னதாகவே வீட்டிற்கு சென்றிருப்பார் என்று அவர்கள் நினைத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மணிமாறனை காணவில்லை.
இதுபற்றி மணிமாறன் வீட்டில் அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அவர்கள் நேற்று காலை கொமந்தான்மேடு பகுதிக்கு வந்து தேடிப்பார்த்தனர். அவர் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதுபற்றி பாகூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடம் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய எல்லையில் இருந்தது.
எனவே இதுபற்றி, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் மற்றும் கடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தென்பெண்ணையாற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது நீரில் மூழ்கி பிணமான நிலையில் மணிமாறன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணிமாறன் குடிபோதையில் ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.