திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தம் செய்வதை தினமும் கண்காணிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவு


திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தம் செய்வதை தினமும் கண்காணிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 16 Oct 2018 11:15 PM GMT (Updated: 16 Oct 2018 9:34 PM GMT)

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தம் செய்வதை தினமும் கண்காணிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், கழிப்பறைகள் தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நேற்று காலை திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பஸ் நிலையம், டவுன் ஹால் பள்ளி மற்றும் சுற்றுப்புறப்பகுதி தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் பாரிஜாதம் தலைமையிலான அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ். கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் வெளிப்புறத்தில் தேவையற்று கிடந்த பொருட்களை அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார். மேலும் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார்.

பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டபோது சுத்தமின்றி இருந்தது. இதனால் அங்கிருந்த துப்புரவு பணியாளர்களிடம் கழிப்பறைகள் தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்று கலெக்டர் கேட்டார். அதற்கு தினமும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமும் சுத்தம் செய்தால், இப்படியா இருக்கும் என்று கண்டித்த கலெக்டர், கழிப்பறைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இதனை உயர் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இதையடுத்து கலெக்டர் பஸ் நிலையம் அருகில் உள்ள தெருக்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை அகற்ற உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டிகளில் கொசுப் புழுக்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்வையிட்டார். பின்னர் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.


Next Story