மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை விளக்கி பெண்கள் ஒப்பாரி


மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை விளக்கி பெண்கள் ஒப்பாரி
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 17 Oct 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

மணப்பாறை,

மணப்பாறையில் பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர பொருளாளர் நல்லுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித், நகர செயலாளர் உசேன், ஒன்றியச் செயலாளர் தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சவுக்கத் அலி, ரஹமத்து நிஷா மற்றும் தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மணப்பாறை நகரில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்கள் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். பஸ் நிலையத்தில் கூடுதல் இலவச சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 27 வார்டுகளுக்கும் தடையின்றி காவிரி குடிநீர் வினியோகம் செய்திட வேண்டும், மணப்பாறைபட்டி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும், பெட்ரோல், டீசல், எரிவாயு, உரம் விலை உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக மோட்டார் சைக்கிளுக்கு மாலை போட்டு தட்டு ரிக்‌ஷாவில் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், கோரிக்கைகளை விளக்கி ஒப்பாரி வைத்தனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story