ஆயுதபூஜையை முன்னிட்டு திருப்பூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


ஆயுதபூஜையை முன்னிட்டு திருப்பூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2018 3:15 AM IST (Updated: 17 Oct 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது.

திருப்பூர், 

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு அவினாசி, சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து அனைத்து வித பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சாதாரண நாட்களில் தினசரி 5 முதல் 7 டன் பூக்களும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் 10 முதல் 12 டன் பூக்களும் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகள் இங்குவந்து பூக்களை வாங்கிச்செல்கிறார்கள். இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி திருப்பூர் பூமார்க்கெட்டுக்கு நேற்று சுமார் 8 டன் பூக்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அனைத்து பூக்களின் விலையும் நேற்று முன்தினத்தை விட நேற்று உயர்ந்திருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ செவ்வந்தி நேற்று ரூ.160-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.220-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட முல்லை, ஜாதிமல்லி ரூ.480-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட பட்டுப்பூ ரூ.50-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.160-க்கும், விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து பூ மொத்த வியாபாரிகள் கூறும்போது, “இன்று (புதன்கிழமை) ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனை நன்றாக இருக்கும்” என்றனர். பூமார்க்கெட்டில் மக்கள் கூட்டம் ஓரளவு இருந்ததால் பூமார்க்கெட் ரோட்டில் வாகன நெருக்கடி காணப்பட்டது. அதுபோல் ஆயுதபூஜைக்கு அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் ஜரிகையினாலான தோரணங்கள், பூக்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.


Next Story